Sunday 21 June 2015

யோகம் - ஒரு முன்னுரை...



இன்று சர்வதேச யோகா தினம்.....
யோகம் - ஒரு முன்னுரை...

முக்தியைப் பெற ஆகமங்கள் கூறும் நான்கு வழிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இவற்றில் 'சாரூப்ய' முக்தியை அருள்வது யோகம்.

யோகம் என்றால் ஓகம் --> ஓத்தல்  --> இணைத்தல் என்று பொருள்.
(நல்ல தமிழ்ச்சொல்லை கெட்ட வார்த்தையாக்கி விட்டனர். என்ன செய்வேன்!)
மனிதனை இறைவனோடு இணைத்தல் இக்கலையின் நோக்கம்.

ஆதி சிவன் கொடுத்து உமா தேவி, நந்தி, சப்த ரிஷிகள், சனகாதி முனிவர்கள், நவதாத சித்தர், பதினெட்டு சித்தர்கள் என இக்கலை பயணித்த பாதை பெரிது.
தென்னாடுடையவர் சிவன் மட்டுமல்ல சித்தர்களுமே.
18 சித்தர்கள் தொடங்கி பல்லாயிரம் சித்தர்கள் தோன்றி இம்மண்ணில் யோகமும் மருத்துவமும் கலைகளும் வளர்த்தனர்.
யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியும், ஆயுள்வேதம் அருளிய தன்வந்த்ரியும்,
பல்வேறு தளவாடங்கள் நிறைந்த தற்காப்பு மற்றும் போர்க் கலையான பரசுராமனின் வடக்கன் களரியும் சிறந்தது தென்னாட்டில்.
வெறும் கையாலும், வர்ம முறைகளாலும் தற்காக்கவும் போரிடவும் மருத்துவம் செய்யவும் உதவும் தெக்கன் களரியும் தமிழொடு சேர்த்து அகத்தியன் வளர்த்ததும் தென்னாட்டில்.
அகத்தியர், போகர், திருமூலர், பதஞ்சலி, தன்வந்த்திரி, விஸ்வாமித்திரர், வஷிஸ்டர்....என மிகப் பெரும் ரிஷிகள், யோகிகள், சித்தர்கள் வாழ்ந்தும் ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்கூறும் தென்னாட்டில்.

மூலாதாரம் தொடங்கிய ஆறாதாரம் தொட்டு ஏழாவதான சஹஸ்ரத்தில் பரமசிவத்தை உணர்வதே யோகியின் இலட்சியம். ராஜ யோகம், அட்டாங்க யோகம், ஹட யோகம், குண்டலினி யோகம் என்று எத்தனை முறைகள் எத்தனை பெயர்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனை ஆசனங்கள், முத்திரைகள்!
உண்ட நிலை, அமர்ந்த நிலை, படுத்த நிலை, உறங்கும் நிலை, நீட்டிய நிலை, குறுக்கிய நிலை.....
காலைக் கடன் கழிக்கும் நிலை கூட ஒரு முக்கிய ஆசனம். ஐயப்பன் அமர்ந்திருக்கும் ஆசனம் அது!
குண்டலினி மேல் எழ உதவும் சிறப்பான ஆசனம் அது(மலாசனம்).

சூரிய வணக்கம் (Surya Namaskaaram)


மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விஷுத்தி, ஆஞ்ஞை, சகஸ்ரம் என்ற ஏழ் ஆதாரங்கள். அவற்றை இயக்கும் ஓம்-ந-ம-சி-வ-ய எனும் பிரணவத்தோடு கூடிய ஐந்து ஒலிகள்.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் யோகத்தின் எட்டு நிலைகள்.
இடகலை, பிங்கலை, சுழுமுனை....என்று நாடிகள் எழுபத்தி இரண்டாயிரம்.
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானான்....என்று வாயுக்கள் பத்து.
தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம் என வர்மம் பிரயோகம் செய்ய வர்மப் புள்ளிகள் நூற்றெட்டு!
நடராஜனின் ஆடல் கலையும் அதில் வரும் நூற்றெட்டு நிலைகளும் யோக முறைகளே.
காம சாத்திரத்திலும் யோகம் உண்டு.
அப்பப்பா!!! மலைக்க வைக்கிறது நம் யோக முறைகள்.

சர்வதேச யோகா தினமான இன்று இறைவனையும், பெரியவர்களையும், முன்னோர்களையும் நினைத்து வணங்கி... நம் பெருமைகளையும் பண்பாட்டையும் கலைகளையும் வளர்க்க உறுதி பூண்டு செயல்படுவோம்.

குறிப்பு:
தொலைக்காட்சியைப் பார்த்து செய்வது, நூல்களைப் படித்து செய்வது என்ற ஏகலைவன் வழிகளை விட ஒரு உண்மையான நுட்பம் அறிந்த குருவைத்தேடி அறிந்து யோகத்தை நேரில் கற்றுக்கொள்ளுங்கள்.
நூல்கள் வழிகாட்டி தான் குருவல்ல.
மூச்சுப்பயிற்சி இல்லாமல் எசக்கு பிசக்காக உடலைத் திருகினால் ஆறாதார நிலை கெட்டுவிடும்.
நல்லதைக் கொடுக்கும் யோகம் கெட்டதையும் கொடுக்கும்.
தேவநிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அசுர நிலைக்கும் கொண்டு செல்லும்.
கவனத்தோடு கற்று நுட்பங்களை அறிந்து செய்யுங்கள்.
இது உடற்பயிற்சியல்ல மனிதனின் ஒப்பற்ற ஆற்றல்களோடு தொடர்புடைய கலை.

Creative Commons License
யோகம் - ஒரு முன்னுரை.... by Dhanesh Rathinasamy is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.