Thursday 15 January 2015

தைத் திருநாள் - பொங்கல் திருநாள் வாழ்த்துகள் :)



நாளை பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் உள்ளம் கனிந்த இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
சூரியப் பொங்கலுடன் சூரியனை வணங்கி புதியதொரு வழியும் பிறக்கப்போகுது தை பிறந்தாச்சு வழி பிறந்தாச்சு என்று அனைவரும் கொண்டாடுவோம்.
வாழ்த்துகள்!!! :)

வீடு சுத்தம் செஞ்சாச்சு. வீட்டுக்கு சுண்ணாம்பு பூசுறவங்களும் பெயின்ட் அடிப்பவங்களும் அடிச்சிருப்பீங்க. மாக்கோலம் போட்டு, வேப்பந்தழையும் பூளைப் பூவும் கொண்டு காப்பு கட்டியாச்சு! வீட்டுல அம்மா அக்கா அம்மச்சி பெரியம்மா எல்லாரும் தட்டை முறுக்கு, ஓலை முறுக்குனு சுட்டுட்டு இருக்காங்க. இப்போ எனக்காக அம்மா தோசை சுட்டுட்டு இருக்காங்க! ;)
இதுக்கு நடுவுல புதிய தலைமுறையிலும் தினத்தந்தியிலும் ஒரு பழைய காப்பிய சூடு பண்ணிட்டு இருந்தாங்க! -தமிழ்ப் புத்தாண்டு எது? சித்திரை 1-ஆ? தை 1-ஆ? பழைய காப்பியா இருந்தாலும் சூடாக்குன உடனே ருசியா தான் இருந்துச்சு!!!

நானும் இன்னிக்கு அது தொடர்பா தான் என் கருத்துக்கள பதிவு பன்றன்.
தலைப்புக்கு போவோம்....

தமிழ்ப் புத்தாண்டு - எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சித்திரை 1-ஐ தான் தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடி வருகிறோம். வீடு பூசி மெழுகுவதும், தை-1  புத்தாடை அணிவதும், பொங்கல் வைத்து சூரியனை வணங்குவதுமாக தான் கொண்டாடி வருகிறோம். தை முதல் நாளை தி.மு.க. அரசு  தமிழ் புத்தாண்டு என்று அரசானை பிறப்பித்து அறிவித்தது! நானும் அப்போது தமிழ் மீதுள்ள பற்றில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வரலாற்றைப் இணைய வாயிலாகப் படித்துக் கொண்டு வந்த காலம் அது. ஆரிய-திராவிட பிரிவும், தனித்தமிழ் இயக்கம் போன்றவற்றீன் மீது நான் என் கருத்தை செலுத்தியிருந்தேன். நானும் தை முதல் நாளை நான் தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொண்டேன்.

தை முதல் நாளை நான் தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொண்டதற்கான காரணங்கள்:

1.  தமிழருக்கு ஆண்டுக் கணக்கு வேண்டும். அதற்கு திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கொண்டு வழக்கத்தில் இருக்கும் திருவள்ளுவர் ஆண்டைக் கொள்ளலாம் என்பது எனக்கு சரியாகப் பட்டது.

2.  ஆரிய(சமஸ்கிருத) பெயர்களினாலான அறுபது வருடங்களின் பெயர்கள் தமிழில்லை; அதேபோல் அவ்வருடங்கள் தொடங்கும் சித்திரையின் பெயரும் தமிழில் இல்லை, ஆகவே தமிழே அல்லாத பெயரைக் கொண்டிருக்கும் இவற்றை ஏன் தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சிந்தித்தேன்.

3. சூரியன் தன் தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கி நகரும் காலம் தையில் தொடங்குகிறது. இது மகர சங்கராந்தி என்றும், உத்தராயணம் என்றும் அழைக்கப்படுவதாகும். இந்த வாதம் எனக்கு அறிவியல் பார்வை இருப்பதாக தெரிந்தது.

5. தமிழ் இலக்கியங்களில் தை நீராடல் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பானவை.

6. அருவடை முடிந்து பொங்கல் விழாவோடு தமிழர் திருநாளே(சாதி சமயம் கடந்த தமிழர் விழா) தை முதல் நாளே தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட ஏற்ற நாளாகக் கருதினேன்.

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று வாழ்த்துக்கூறி மகிழ்ந்தேன்.
எல்லோரிடமும் பெருமையுடன் வாழ்த்துகள் தெரிவித்தேன். சித்திரை அன்று 'தமிழ் புத்தாண்டு' என்பதை மாற்றி 'சித்திரை திருநாள் வாழ்த்துகள்' என்று கூறும் வழக்கமும் அப்போது தான் என்னிடம் தொடங்கியது.

இரண்டு வருடங்கள் சென்றது. மூன்றாவது வருடம் சித்திரை முதல் நாளையே நான் தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் ஏற்றுக் கொண்டேன். அதே கால கட்டத்தில் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரைத் திருநாளை தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் மீண்டும் பழைய வழக்கத்திற்கு மாறிய காரணங்கள்:

1. எந்த திருவள்ளுவரைக் கொண்டு  திருவள்ளுவராண்டு உண்டாக்கப் பட்டதோ, அவரின் பிறந்த நாள் உறுதி செய்யப்படாத ஒன்று. தை முதல் நாள் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது என்பதும், இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது என்பதும் தனித்தமிழ் இயக்கம் நடத்தியவர்கள் மற்றும் தி.மு.க தலைவரின் கூற்றே தவிர ஆதாரமற்றவை. தை முதல் நாளில் திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கவும் அதை தமிழ் புத்தாண்டுக்கும் எண்ணத்திலும் அடிப்படையற்ற தமிழ்த் தூய்மைவாதம் பேசியவர்களின் முயற்சியே இது.
(இன்று நடந்த விவாதத்தில் திருவள்ளுவர் பிறந்தது வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரம் என்ற பேச்சு அடிபட்டது. அந்நாளுக்கு பதிலாக தை மாதத்திற்கு தி.மு.க. அரசால் அன்றைய நாளில் சட்டம் ஏற்றி மாற்றி அமைக்கப்பட்டது என்று நிகழ்ச்சியில் செ.கு.தமிழரசன் கூறினார்  என்பது கூடுதல் செய்தி).

2. ஆரியம் - திராவிடம் ஆகியவை மொழியியல் சொற்களாக நான் உணர்ந்த காலம் வந்தது.

* அறுபது ஆண்டு கால சுழற்சி என்பது சோதிடத்தில்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

- வியாழ(குரு) கிரகம் ஐந்து முறை சூரியனை சுற்றி வரும் காலம் அது.

- குரு கிரகம் இராசி மண்டலத்தில் பன்னிரண்டு இராசிகளையும் ஐந்து முறை
கடந்து செல்ல எடுத்துக்கொள்ளும் காலம் அது.

- இந்த 'பிரபவ', 'விபவ' என்று தொடங்கும் அறுபது ஆண்டு காலக் கணக்கை வைத்து அறுபது ஆண்டுக்கும் தனித்தனியே மழை, ஆட்சி, சுகம் பற்றி
பலன் சொல்லும் தமிழ்ச் சித்தர் ஒருவரின் பழந்தமிழ் நூலும் உண்டு(பாடியது இடைக்காடர் என்று நினைக்கிறேன்). பஞ்சாங்களில் இப்பாடல்களைப் பார்க்கலாம்.

3. தை உத்தராயணத்தில் தொடங்குகிறது என்றால் சித்திரை 'வசந்த காலம்' என்னும் இளவேனிற் காலத்தில் தொடங்குகிறது.
பனிக் காலம் முடிந்து சூரியன் முழுமையாக பயிர்களும் செடிகளும் பிற உயிர்களும் ஒளி பெற்று செழித்து வளர தன் கதிர்களை வெளிப்படுத்தத் துவங்கும் காலம்.

* தொல்காப்பியர் பருவங்களை சொல்லும்போது இளவேனிற் காலத்தில் துவங்குகிறார்.

* மேஷம் தொடங்கி இராசி மண்டலங்களில் சூரியன் சஞ்சரிக்கத் தொடங்கும் காலம் சித்திரை ஆகும்.

-சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இராசியைக் கடப்பார். (இராசிகள் பூமியிலிருந்து நோக்கும்போது தெரியும் வான்வெளியின் பகுதிகளின் பெயர்).
பன்னிரண்டு மாதத்தில் பன்னிரண்டு இராசிகளைக் கடப்பார்.

-கடக இராசியில்(ஆடி மாதத்தில்) சூரியன் தன் தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவார்(from Tropic of CANCER in North towards South).
அதுவே 'தட்சினாயாணம்' எனப்படும். மீண்டும் மகர இராசியில்(தை மாதத்தில்) தன் வடக்கு நோக்கிய பயணத்தை(உத்தராயணம்) தொடங்குவார்
(from Tropic of CAPRICORN in South towards North).

-இதனால் தான் மலையாளிகள் இன்றும் தங்கள் மாதங்களின் பெயரை
மேஷம், ரிஷபம்... என்று வைத்துள்ளனர். நாமும் அவ்வாறு கூறி வந்துள்ளோம்.
நம்முடன் நெருங்கிய தொடர்புடைய மலையாளிகளும் சித்திரையைத் தான் புத்தாண்டாக சித்திரைக் கனியாக கொண்டாடி வருகின்றனர்.
எங்க கொங்கு பகுதியிலும் சித்திரைத் திருநாளைத் சித்திரைக் கனி என்றே அழைப்பர்.

4.தை முதல் நாளை, மகர சங்கராந்தியைத் தமிழர் மட்டுமல்ல ஆந்திரரும், பஞ்சாபிகளும், வங்காளிகளும், அஸ்ஸாமிகளும் அருவடைத் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். பொங்கல் வைக்கும் பழக்கம் தமிழரிடம் இருந்ததால் பொங்கல் தமிழர் திருநாள் ஆனது.
பொதுவாக உழவர்கள் எந்த பேதமும் பார்க்காமல் இருந்ததால் எல்லா சமயத்தினரும் வழக்கத்தில் கொண்டாடும் விழாவாக பொங்கல் இருந்தது. மற்ற சமயத்தினர் அதை தம் விருப்பத்தினால்  நம்மோடு ஒற்றுமையாக நல்லிணக்கத்தின் அடிப்படையில் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்(கேரளாவில் ஓணம் பண்டிகை போல).
ஆனால் ஏதோ பொங்கல் இந்து சமய தொடர்பற்றது என்பதெல்லாம் அரசியல் வெளிப்பூச்சு.

5. வானியல் அறிவு உள்ள சோதிடர்களை வைத்து இல்லாமல், இலக்கியம் பேசும் தமிழ் அறிஞர்களை(அதுவும் அனைவரும் இதை ஆதரிக்கவில்லை)
வைத்துக் கொண்டு தமிழ்த் தூய்மைவாதம் என்ற பெயரில் உண்மைக்கு மாறாக,  கடவுளையும் புராணங்களையும் மறுப்பவர்கள் தமிழ் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக, ஆதாரமற்ற கூற்றுகளின் அடிப்படையில் வழக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்திரைத் திருநாளுக்கு மாற்றாக தையைப் புத்தாண்டாக அறிவித்திருக்கின்றனர்.

*** என்னைப் பொருத்தவரை தமிழர்கள் இந்துக்கள். (வரலாறும் அதை தான் சொல்கிறது விளக்கத் தயார்). பெண்ணாக உருகொண்ட நாரதருக்கும் - விஷ்ணுவிற்கும் பிறந்த அறுபது குழந்தைகள்(அறுபது ஆண்டுகள்) என்பது காரணம் பற்றி எழுந்த புராணக்கதை அவ்வளவே.

* வடமொழியில் பெயர் இருப்பதால் அறுபது ஆண்டுகள் வேண்டாம் என்றால் தமிழ் மாதங்கள் எனப்படுபவைகளும் வடமொழி(சமஸ்கிருத) பெயர்களே- சித்திரை தொடங்கி பங்குனி வரை வடமொழிப் பெயர்களே.
அவற்றை ஏன் இன்னும் மாற்றாமல் வைத்துக்கொண்டு உள்ளார்கள்?

இக்காரணங்களால் நான் ஆதாரமற்ற தை முதல் புத்தாண்டு எனும் எண்ணத்தைக் கைவிட்டு சித்திரை திருநாளை புத்தாண்டாக கொள்ளும் பழைய வழக்கத்திற்கே மாறிவிட்டேன். :)

இன்னொன்றையும் நாம் சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம்.

--> ஆங்கிலப் புத்தாண்டு என்பதாலேயே அது ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட ஆண்டு முறை ஆகாது. அது இயேசு கிறித்துவின் பிறப்பை ஒற்றி எழுந்த வழக்கம். கிரிகோரியன்(Gregorian calendar)என்பவரால் சீர்படுத்தப்பட்ட  உலகம் முழுக்க உள்ள கத்தோலிக்க கிறித்துவர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஆண்டு முறையாகும்.

--> யுகாதியை தெலுங்கு புத்தாண்டு என்கின்றோம். அது கன்னடரும் கொண்டாடும் புத்தாண்டாகும். தமிழகத்தில் உள்ள வடுகரில் தெலுங்கரே மிகுதி. அதனால் தெலுங்கர் பின்பற்றிய புத்தாண்டை நாம் தெலுங்கு புத்தாண்டு என்கிறோம்! உண்மையில் அது 'யுகாதி'.

-->சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியர்கள் தமிழர்கள் ஆவர். தெலுங்கர் கொண்டாடுவது தெலுங்கு புத்தாண்டு என்பது போல தமிழர் கொண்டாடுவது
தமிழ் புத்தாண்டு என்று எடுத்துக்கொண்டோம்.  உண்மையில் சித்திரை திருநாள் தமிழரால் பின்பற்றிவரப்படும் புத்தாண்டின் தொடக்கம் -அவ்வளவே. மொழிக்கும் புத்தாண்டிற்கும் முடிச்சுப் போட்டு தமிழ் புத்தாண்டு என்று அடித்துக் கொண்டிருக்கின்றோம்! :D :D

-->மலையாளிகளும் புத்தாண்டை சித்திரையில் தான் கொண்டாடுகின்றனர். அதை 'சித்திரைக் கனி' என்றும் 'விஷூ' என்றும் அழைக்கின்றனர்.
மலையாளப் புத்தாண்டு என்று சொல்வதில்லை. அதனால் அவர்களுக்குள் குழப்பம் வரவில்லை.

தமிழ் மொழிக்குத் தனி ஆண்டு முறை, இல்லாத கற்பனையான தனி/புது சமயம் என்று தமிழனைத் தனிமை படுத்தும் கூட்டம் இருக்கும் வரை நம் குழப்பங்கள் தீராது!

என் குழப்பம் தீர்ந்துடுச்சு. உங்கள் குழப்பங்களையும் போகியோடு எரிச்சுட்டு தைத் திருநாளை, சூரியப் பொங்கலை பொங்க வைத்து அளவில்லா மகிழ்ச்சி பொங்க கொண்டாடுங்க. கனு மாட்டுப் பொங்கல் வச்சு மாடுகளுக்கும் நன்றி செலுத்துங்க. காணும் பொங்கலன்னைக்கு எல்லா உறவுகளையும் போய் பார்த்து கொண்டாடுங்க.





அடடா.... நான் என் கட்டுரைய முடிச்சாச்சு..இவங்க இன்னும் முறுக்கு சுடுறத முடிக்கலையே!!! :P அப்படியே போய் நல்லா சூடா நாலு முறுக்க நொறுக்குவோம்!!! ;) மீண்டும் ஒருமுறை பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி. :)

எண்ணங்களைக் கோர்த்தவன்,
தனேஷ் இரத்தினசாமி.